மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் என்பவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இன்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு செல்லும் வழியில் பொட்டுலுபட்டி அருகே புதுப்பட்டியில் தனது நண்பனை பார்த்துவிட்டு கல்லூரி செல்ல இருசக்கர வாகனம் மூலம் பொட்டுலுப்பட்டி விலக்கில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது மதுரையிலிருந்து தேனி நோக்கி செல்லும் அரசு பேருந்து சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கல்லூரி மாணவர் செந்தமிழ் செல்வன் படுகாயமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடிய சூழலில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சாலையோரம் இருந்த இரு மரங்களின் மோதி நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு ஒரு சில பயணிக்களுக்கு மட்டுமே சிறு காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சையுடன் வீடு திரும்பினர்.








