தமிழகம் முழுவதும் வருகின்ற 15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையம் பகுதியில் மேயரின் சொந்த வார்டில் அம்மன் நகரில் உங்களுடன் ஸ்டாலின்
திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேட்டினை தன்னார்வலர்கள் மூலமாக பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று வழங்குவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அப்பகுதியில் குடிநீர் 5 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறது என்று அப்பகுதி நபர் ஒருவர் மேயரிடம் கேள்வி எழுப்பினார். அதே போன்று பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மண்டலம் 1 அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்ட அலுவலகத்தில் முகாம் நடைபெற உள்ளதால் அதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது ஆட்சியர் கழிவறை இருக்கா என கேட்டார். பின்புறம் இருக்கிறது, வெளியில் இருக்கிறது என அதிகாரிகள் மாறி மாறி பேசினர். ஆட்சியர் தேடிய போது அங்கு கழிவறை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, சுதாகரித்துக் கொண்ட அதிகாரிகள் தற்காலிக கழிவறையை பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.

இதற்கு எவ்வளவு வாடகை கொடுத்தீர்கள், அலுவலர்களுக்காக கழிவறை கூட கட்டப்படவில்லையா என கேள்வி எழுப்பினர். இது கோ-ஆப் டெக்ஸ்க்கு சொந்தமான இடம் இங்கு லட்சக் கணக்கில் செலவு செய்து சீரமைத்து வாடகை கொடுத்து பயன்படுத்தியதாகவும், தற்போது புதிய கட்டிடத்திற்கு சென்று விட்டதாகவும் தெரிவித்ததால், இருந்தாலும் கழிவறை கட்டியிருக்கலாம் என ஆட்சியர் புலம்பிச் சென்றார்.