உசிலம்பட்டியில் ஒப்பந்த காலம் முடிந்த பின்னும் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேருந்து நிலைய விரிவாக்க மற்றும் கட்டுமான பணிகள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் துவங்கிய போதே பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகளுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் ஒப்பந்தம் முடிவுற்ற சூழலில் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளிடம் ஒப்பந்தம் முடிந்த பின்னும் தனிநபர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு பேருந்துக்கு 8 ரூபாய் பில் வழங்கி, 10 முதல் 20 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது, இந்த வசூலை தனி நபர் மூலம் வசூல் செய்யப்படுகிறதா, நகராட்சி நிர்வாகம் மூலம் வசூல் செய்யப்படுகிறதா என்ற குளப்பம் நீடித்து வருகிறது.
இதனிடையே முறையான பேருந்து நிலையம் இல்லாத சூழலாலும், பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாலும், உசிலம்பட்டியில் பேருந்து கட்டணம் செலுத்த வேண்டாம் என மதுரை மாவட்ட அரசு போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் அலுவலகம் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் அறிவுறுத்தப்பட்டு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் குளப்பமடைந்து வரும் நிலையில் ஒரு சில அரசு பேருந்து நடத்துனர்கள் நுழைவு கட்டணம் கொடுக்க மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் தனியார் பேருந்து நடத்துனர்கள் 8 ரூபாய்க்கு 10 முதல் 20 ரூபாய் கொடுத்துவிட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.








