• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தலைசிறந்த மாவட்டமாக கோவை மாற்றப்படும் –முதல்வர் ஸ்டாலின்

Byகாயத்ரி

Nov 22, 2021

கோவையில் இன்று நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது கோவையில் 23,534 பேருக்கு ரூ.441.76 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த விழாவில் ரூ.89.73 கோடியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை முதல்வர் திறந்தார். பல்வேறு துறைகள் சார்பில் ரூ.596.02 கோடியிலான 67 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பேசிய அவர்; வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் பணியாற்றி வருகிறோம். அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள் என்ற நினைவிலேயே உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆட்சி அமைத்த உடனேயே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் அரசாக திமுக அரசு செயல்படும். தற்போது பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். மனுக்களுக்கு நான் தீர்வு கண்டு வருவதை மக்கள் பெருமையாக பேசுகிறார்கள்.

கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு ரூ.1,132 கோடி ஒதுக்கீடு; விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறும். கோவை நகரின் மத்தியில் உள்ள சிறைச்சாலை நகருக்கு வெளியே மாற்றப்படும். சென்னை போல் கோவை மாநகர வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தர அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் முதல் தொழில் முகவரியாக தமிழ்நாடு மாற வேண்டும். பல கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழில்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த மாவட்டமாக கோவை மாற்றப்படும்.மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட சின்னவேடம்பட்டி, வெள்ளகிணறு ஆகிய பகுதிகளில் ரூ.332 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்படும். மாவட்ட மக்களின் கூடுதல் மருத்துவ வசதிக்காக ரூ.16 கோடி செலவில் நலவாழ்வு மையங்கள் துவங்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.