• Mon. Mar 17th, 2025

திமுக கூட்டணியில் கோவை தொகுதி யாருக்கு?

Byவிஷா

Mar 12, 2024

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் கோவை தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பதில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடக்கும் 39 தொகுதிகளில் முக்கியமானது கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவை மக்களவைத் தொகுதியில், சிறு, குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள் அதிகளவில் உள்ளன. எனவே, தேர்தல் முடிவில் தொழிலாளர்களின் வாக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், கோவை மக்களவை தொகுதி, திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுகவே கோவையில் களம் காணுமா அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்படுமா என்ற எதிர் பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை போட்டியிடாத சில தொகுதிகளில் இந்த முறை போட்டியிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், கோவையும் இருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், கோவையில் திமுக சார்பில் எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை.
அரசு விழாக்களில் மேடையில் அமரக்கூட மேயரைத் தவிர திமுக சார்பில் வேறெந்த பிரதிநிதியும் இல்லை. எனவே, இச்சூழலில் கோவையில் திமுக நேரடியாக போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என அக்கட்சியினர் கருதுகின்றனர். அதே நேரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இத்தொகுதி மீண்டும் தங்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் விரும்பு கின்றனர்.
தற்போதைய எம்.பியின் செயல் பாடு குறித்து பெரிய அளவில் அதிருப்தி ஏதும் இல்லாத சூழலில், மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் வெற்றி நிச்சயம் என்கின்றனர். ஒதுக்கும் வாய்ப்பு மிக குறைவு என்றாலும் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியினரும் கோவையில் போட்டியிட விரும்புவதாக தெரியவந்துள்ளது. இதற்கான விடை ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.