வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்த நிலையில், நீலகிரிக்கு அருகில் உள்ள கோவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கோவை ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், பூ மார்க்கெட், வடகோவை, சாய்பாபாகாலனி, வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் ஓரிரு புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக சாலையில் செல்வோர், மற்றும் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் கோவை மாநகரில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

