சர்வதேச கடற்கரை தூய்மை தினம் மற்றும் பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு ஆண்டு விழாவையும் முன்னிட்டு, இந்தியாவின் நூறு கடற்கரைகளில் தூய்மை பணி செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக, நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தைச் சேர்ந்த விழுந்தமாவடி கடற்கரையில் நூறாவது தூய்மை பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடலோர வளங்கள் மற்றும் மீன்வளத் துறை இயக்குநர் வேல்விழி, நபார்டு வங்கியின் டிடிஎம். விஸ்வந்த்குமார், கடலோர காவல் குழும உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், கிராம பஞ்சாயத்தார் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கடல் வளங்களைப் பாதுகாப்பது, கடற்கரை சுத்தமாக இருக்க வேண்டிய அவசியம், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை மீனவ மக்களிடம் எடுத்துரைத்தனர்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தூய்மை பணியில், சுமார் 750 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சேதமடைந்த மீன்பிடி வலைகள் சேகரிக்கப்பட்டு, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பணி மூலம், கடல் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளில் சிக்கி உயிரிழப்பது தவிர்க்கப்படுவதோடு, மீன்வள வளம் அதிகரிக்கும். கடற்கரை சுற்றுலா மேம்பட உதவுலதோடு கடலோர சூழல் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் மாறுகிறது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார்வலர்கள், மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி கடற்கரையை சுத்தமாக வைத்திருப்போம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.
மொத்தமாக 74 கிலோமீட்டர் கடற்கரைப் பரப்பில், 6,500 தன்னார்வலர்கள் பங்கேற்று 38 டன் கடல் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பது சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பு மட்டுமல்ல. ஆரோக்கியமான சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் நம்மால் செய்யப்படும் முக்கிய முதலீடு என்பதை விழுந்தமாவடியில் நடைபெற்ற இந்த தூய்மை பணி எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.