300 திருச்சபைகளுக்கான கல்லறை நிலத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பல்லாவரம் கிறிஸ்தவ பொதுக் கல்லறை கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பல்லாவரம் வட்டாரத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட திருச்சபைகளின் போதகர்கள் கலந்து கொண்டனர். இப்பகுதியில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவ மக்கள் வசித்து வருவதாகவும், அவர்களுக்கென உள்ள சிறிய அளவிலான கல்லறைகள் நிரம்பி வழிவதால், ஒரே குழியை மீண்டும் மீண்டும் தோண்டும் அவலநிலை நீடித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குடும்பக் கல்லறைகள் அமைக்கவும் இடமின்றி பெரும் சிரமம் நிலவி வருகிறது என கூறினர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லறை நிலம் பெற அரசுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களை தொடர்ந்து சந்தித்தும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றும், இறந்த பின்பும் உடலை நிம்மதியாக புதைக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில், கல்லறைக்கான இடத்தை தாமதமின்றி ஒதுக்க வேண்டும், அரசு அதிகாரிகளுடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சட்டப்பூர்வமான கையெழுத்து இயக்கம், ஊடக விளக்க அறவழி போராட்டம் மற்றும் தொடர் பிரச்சாரங்கள் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து பேசிய பல்லாவரம் கிறிஸ்தவ பொதுக் கல்லறை கூட்டமைப்பு தலைவர் போதகர் டி.சாம்.ஜெயபால், “கிறிஸ்தவ மக்களின் அடிப்படை தேவையான பொது கல்லறை தோட்டத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.




