• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆன்லைனில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகள்… எப்படி இணையத்தை கையாள்வது..!!

Byகாயத்ரி

Oct 7, 2022

இன்றைய மொத்த உலகமும் ஆன்லைன் மூலம் தான் இயங்கி கொண்டிருக்கிறது. அதற்குக் கல்வித்துறையும் விலக்கல்ல. “2020ல் கொரோனா தாக்கம் என்று ஆரம்பித்ததோ அப்போதே ஆன்லைன் வெறியாட்டம் ஆரம்பித்துவிட்டது”.

கல்வி முக்கியம் என்பதால் சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை உள்ள அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் முழுவீச்சில் நடைபெற்றது. எனவே, இன்றைய தலைமுறையினர், லேப்டாப் வழியே கூகுள் ஹேங்அவுட் (Google Hangouts),கூகுள் மீட் (Google Meet) போன்ற வீடியோ மீட்டிங் ஆப்களின் மூலம் தங்கள் கல்வியை தொடர்கின்றனர். அதுமட்டுமின்றி, தனியார் பள்ளிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் கல்வி சார்ந்த கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டாலும் இதனை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிப்பது மிகவும் அவசியம்.

ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் மனநிலை மட்டுமல்ல, உடல்நிலையும் மோசமடையும். குறிப்பாக, ஆன்லைன் வகுப்புகளுக்காகத் தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் ஆண்ட்ராய்டு, லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களைத் பயன்படுத்தும் போது, மாணவர்களின் கண்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் குழந்தைகள், அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. படிப்பிற்காக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனி அறையில் விட்டுவிடுவதால் பிள்ளைகளுக்கு கவனசிதறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அதிலும் சிறு வயதிலே ஆன்லைன் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் வந்துவிட்டால் அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அதனால் சிறு வயதிலே போன், லேப்டாப் போன்றவைகளை அவர்களிடமிருந்து தள்ளி வைக்க பெற்றோர்கள் முயல வேண்டும். ஆன்லைன் விளையாட்டால் பல உயிர்களை நாம் இழந்திருப்போம், அதற்கு காரணம் அவர்களுடன் நேரம் செலவழிக்காமல் இயந்திரத்தை கொடுத்து விடுவதனால் மட்டுமே. அதில் சிறுவர்கள் மூழ்கிவிட பின் செய்வதறியாது திணறி வருகின்றனர் பெற்றோர்கள். இதுவும் ஒரு விதமான போதை தான். “படிக்க தனி அறை ஒதுக்குவது தவறில்லை, பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிடுவது தான் விபரீதம்”. சில பேருக்கு இணையத்தை சாதகமாக்கி தவறான வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதில், ஆன்லைன் வகுப்பில் இணையும் பெண் குழந்தைகளின் புகைப்படங்கள், சமூக விரோதிகளால் மார்ஃபிங் செய்யப்படுகிறது. அதேபோன்று, மூன்றில் ஒரு குழந்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் மாட்டிக் கொள்கின்றது . அதுமட்டுமின்றி, ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் மனநிலை, பக்குவம், பாலியல் விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, பாதுகாப்பான முறையில் இணையத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க தேவையான விஷயங்கள்.

*பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் ஆன்லைனில் நேரத்தை செலவிடுங்கள்.

*உங்கள் குழந்தைகள் வீடியோ கேம், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டால், அவர்கள் அருகில் உட்கார்ந்து கவனித்துக்கொள்ளுங்கள். அவர்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறார்கள், எந்த மாதிரியான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் ஒரு நண்பர் போல அடிக்கடி பேசுங்கள்.

*உங்கள் குழந்தைகளின் வயதைப் பொருத்து, சம்மந்தமில்லாத நெருக்கமான படங்கள் போன்ற சில வகையான புகைப்படங்களைப் பகிர்வதால் ஏற்படும், கடுமையான விளைவுகளை (சட்ட விளைவுகள் போன்றவை) பற்றி நீங்கள் பேசலாம்.

*இரவு 8 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி பார்க்கக் கூடாது அல்லது படுக்கையறையில் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது. இதுபோன்ற விதிகளை உங்களது வீட்டில் அமைத்து, அவற்றை நீங்களும் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

இன்றைய தொழில்நுட்பம் அதிக வளர்ச்சியைக் கொண்டதால் நாம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நன்மையை தரும். உங்கள் குழந்தைகள் “புதிய ஆப்களை பயன்படுத்தினால் அது என்ன, எப்படி செயல்படுகிறது என்றெல்லாம் அவசியம் பெற்றோர்கள் கேட்டுத்தெரிந்துக்கொள்ள வேண்டும்”. இணையத்தை எப்படி கையாள்வது குறித்தும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். இணையம் மனிதனின் வாழ்வில் தற்போது ஒரு முக்கிய அங்கம், ஆனால் அது சிறு வயதிலே சிதையாமல் தடுப்பது அனைவரது கடமை. உங்கள் பிள்ளைகளிடம் பெற்றோர்களாக இல்லாமல் நண்பனாக பழகுங்கள்..!!