• Fri. Apr 26th, 2024

ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

Byகாயத்ரி

Nov 20, 2021

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, முதல்வர் ரங்கசாமி இன்று (நவ.20) ஆளுநர் மாளிகையில் சந்தித்து கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துப் பேசினார்
கனமழையால் புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மழை பாதிப்பு இடங்களை ஆளுநர், முதல்வர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


சிவப்பு அட்டைதாரர்களுக்கு மழை நிவாரணமாக ரூ.5 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அட்டை தாரர்களுக்கும் நிவாரணம் அறிவிக்க வேண்டுமென பலதரப்பில் கோரிக்கையும் எழுந்துள்ளது. இதற்கிடையே மழை வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட வருகின்ற 22-ம் தேதி மத்தியக் குழு புதுச்சேரி வருகிறது.


இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, முதல்வர் ரங்கசாமி இன்று (நவ. 20) ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். சுமார் 15 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பாதிப்புகளைக் குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள், நிவாரண உதவிகள், சாலைகள், பயிர்கள் சேதம், வீடுகள், கால்நடைகள் பாதிப்பு குறித்து ஆளுநரிடம் ரங்கசாமி எடுத்துரைத்தார்.


மேலும் 22-ம் தேதி மழை வெள்ள பாதிப்புகளை மதிப்பிட மத்தியக் குழு புதுச்சேரி வர உள்ளது. அவர்களிடம் தாக்கல் செய்யக்கூடிய விவரங்கள் குறித்தும், கடலோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பைத் தடுப்பதற்கு மத்திய அரசுடன் உதவியோடு தடுப்புச் சுவர் எழுப்புவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.


மத்திய அரசிடம் முழுமையான நிவாரணத்துக்கு முன்பு இடைக்கால நிவாரணம் பெறுவது குறித்தும், மஞ்சள் அட்டை தாரர்களுக்கு நிவாரணம் வழங்குவது சம்பந்தமாகவும் ஆளுநருடன் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *