• Fri. Jan 30th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

செவாலியர் அகாடமி என். எஸ். எஸ். சார்பில் விழிப்புணர்வு பேரணி..,

ByS.Ariyanayagam

Jan 29, 2026

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
என். எஸ். எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல் ராஜக்காபட்டியில், பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசுஆரோக்கியம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக அதிகாரி அருட் தந்தை பிரிட்டோ முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஞானசீலா அனைவரையும் வரவேற்றார்.

திட்ட அதிகாரி ஜூலியட் ரோஸ், உதவி திட்ட அதிகாரி மணிகண்டன், ஆங்கில ஆசிரியர் ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர். விழிப்புணர்வு கருத்தரங்கை வட்டார வளர்ச்சி அதிகாரி இளையராஜா துவக்கி வைத்தார். மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: குழந்தைகளை பெற்றோர்கள் கண்களாக பாதித்து வளர்க்கிறார்கள். நீங்கள் வாகனங்களை ஓட்டாமல், விபத்துகளை சந்திக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்கள் பெற்றோர்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டி, இறந்தவர்களை கண்டு நான் மனம் வருந்தி இருக்கிறேன்.

அவர்கள் குடும்பம் நடுத்தெருவில் இருப்பதை கண்டு, நான் கண்கலங்கி இருக்கிறேன். அதுபோல வாகன லைசென்ஸ் வைத்திருப்பவர்கள், ஹெல்மெட் அணிந்து, மொபைல் போன் பேசாமல், மது போதை இல்லாமல் டூவீலரில் பயணிக்க வேண்டும். குழந்தைகள் தற்போது மொபைல் போன் வேண்டும், வாகனம் வேண்டும், என அடம் பிடிக்கிறார்கள். இதற்கு பெற்றோர்கள் சம்மதிக்க கூடாது. போதையில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும். நாளை எதிர்காலம் நீங்கள். நாளை விதை நெல் நீங்கள் என்பதை நினைத்து சாதிக்க வேண்டும். இதற்கு உங்கள் பெற்றோர் சொல்வதை, ஆசிரியர் சொல்வதை கேட்க வேண்டும். போராட்டம் தான் வாழ்க்கை, எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், நாம் மனக்கட்டுப்பாடுடன் இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.

வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பாக இருப்பது குறித்து உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அனைவரிடமும் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ராஜக்காபட்டி கிராமசுகாதார செவிலியர் பாண்டிமாதேவி பேசியதாவது: தாயை தவிர பெண் குழந்தைகள் வேறு யாரையும் தொட அனுமதிக்க கூடாது. போதை தவிர்க்க வேண்டும். ஆனால் உயர்ந்த அதிகாரியாக வேண்டும். உயர்ந்த பதவி வேண்டும் என்ற போதை உங்களிடம் வந்தால் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆசை ஊட்டுபவர்கள் முன்பு நாம் அடிபணிய கூடாது. சுயக் கட்டுப்பாடுதான் ஒரு மனிதனை முழுமையான மனிதனாக மாற்றும், என்றார். சாணார்பட்டி ஏட்டு மணிமாறன், மதுவிலக்கு ஏட்டு அன்பு முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி என். எஸ் .எஸ். மாணவர்களின் சாலை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.