கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை திருப்பூர் மாவட்டங்களை கடந்து கரூர் வரை செல்கிறது. மேலும் கோவையின் முக்கிய ஆறாகவும் நொய்யல் ஆறு இருந்து வருகிறது.

அதே சமயம் இந்த ஆறு கடந்து செல்லும் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஆற்றில் கலந்து நீரில் இரசாயன நுரைகள் பொங்கி வெளியேறும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன.
இந்நிலையில் நொய்யல் ஆறு செல்லும் ஆத்துப்பாலம் பகுதியை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் ரசாயன கழிவுகள் கலந்து வரும் பொழுதெல்லாம் என்னென்ன சிரமங்கள் ஏற்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது அவரிடம் பேசிய மக்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் ஒவ்வொரு கட்சியினரும் அரசு அதிகாரிகளும் பார்த்து விட்டு தான் செல்வதாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினர்.