.குமரி மாவட்டத்தில் இந்து வழிபாட்டு கோயில்களில் புகழ் பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரின் திருவடம் பிடித்து தேரை இழுத்தனர், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காலை 7.30 மணிக்கு தட்டு வாகனங்களில் சாமி மற்றும் அம்பாளும்,அறம் வளர்த்த நாயகி அம்மனும், விநாயகரும் தனித்தனியாக எழுந்தருளி கோவிலில் இருந்து வெளியே வந்தனர்.அப்போது துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

சாமியும், அம்பாளும் அம்மன் தேரிலும், அறம் வளர்த்த நாயகி அம்மன் சப்பரத்திலும், விநாயகர் விநாயகர் தேரிலும் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு சந்தனம் தெளித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை சரியாக 8.30 மணிக்கு திருவடம் பிடித்து பக்தர்கள் தேரை இழுத்தனர். நாலு ரத வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேர் காலை 10.30 மணிக்கு நிலைக்கு வந்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை அவ்வப்போது பெய்து வந்த நிலையில் தேரோட்டத்தின் போது மழை தூறல் இல்லாதிருந்தது பக்த்தர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.