சந்திரமுகி 2′ படத்தில் இடம்பெறும் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக்கை லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில்- காமெடி திரைப்படமான ‘சந்திரமுகி 2’ படத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப் பட்டிருக்கிறது.
சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில், ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.
பன்முக திறமையுள்ள கலைஞரான ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ இந்த ஆண்டின் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.
இந்த திரைப்படத்தை பி. வாசு இயக்கியிருக்கிறார். மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களை வழங்கிய பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக இந்த திரைப்படம் தயாராகிறது. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்திற்காக தேசிய விருது பெற்ற தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.
திகில் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி கே எம் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.