முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், எனக்கும் வழித்துணையாக இருப்பவர் என சட்டசபையில் துரைமுருகனை பாராட்டி பேசினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றில் இருந்து அடுத்த மாதம் 17-ந்தேதி வரை துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை நடைபெறுகிறது. நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் உள்ளார். இவர் நீண்டகாலமாக சட்டசபையில் உள்ளார். இவரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மு.க. ஸ்டாலின், ‘துரைமுருகன் சட்டப்பேரவையின் நூற்றாண்டு நாயகன். அவர் எனக்கு வழிகாட்டியாக உள்ளார். கலைஞர் கருணாநிதிக்கும், எனக்கும் வழித்துணையாக இருந்தவர். எந்தத்துறை கொடுத்தாலும், அதில் முத்திரை பதிப்பார்’ என பாராட்டி பேசினார்.
அமைச்சர் துரைமுருகனை, கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது இடத்தில் வைத்து பார்ப்பதாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கமாகப் பேசியதை கேட்டு கண்கலங்கிவிட்டார் துரைமுருகன்.
“என் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசி இருக்கிறேன்… வார்த்தைக்காகவும், பொருளுக்காகவும் யோசித்தது இல்லை. ஆனால் இன்றைக்கு எனக்கு பேச வார்த்தைகள் இல்லை… எத்தனையோ வெற்றி தோல்விகள் நடைபெற்றிருந்தாலும், என் தலைவர் இன்றைக்கு கொண்டு வந்த தீர்மானத்தில் அனைத்து கட்சிகளும் பாராட்டியுள்ளனர்… இந்தத் தீர்மானம் வருமென்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நான் சாதாரண கிராமத்தை சேர்ந்தவன், விவசாயி மகன்.. வேறு இடமாக இருந்தால் ஸ்டாலினை கட்டி அணைத்திருப்பேன்” என்றார்.