

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தரப்பில் தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக வைக்கவும் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மத்திய அரசு இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக மனுவில் கூறிய அவர், அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற 20 மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வரும் சூழலில், அதில் தமிழை கட்டாயமாக்க அவர் கோரியிருந்தார். மதுரை கிளை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் வாதம் செய்யப்பட்டது. அதில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என கூறப்பட்டது. அதனை கட்டாயமாக்கவும் முடியாது என மத்திய அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது.
கேந்திரிய பள்ளிகளில் தமிழை பாடமாக பயில விரும்பும் மாணவர்கள் தேர்ந்தெடுத்து பயிலலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசு பள்ளிகளில், அந்தந்த மாநில மொழி பாடமாக இருக்கிறது எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், நாடு முழுவதும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் நோக்கிலேயே இப்பள்ளிகள் நடத்தப்படுவதாகக் கூறி, வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
