• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழங்குடி மக்களுடன் இணைந்து ஈஷாவில் தீபாவளி கொண்டாட்டம்!

BySeenu

Nov 12, 2023

ஆதியோகியில் நாளை நடைபெறும் ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆதியோகி முன்பு ஒன்றாக இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ உள்ளனர்.

இதில் தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, நல்லூர்பதி, சீங்கபதி, சாடிவயல்பதி உள்ளிட்ட ஏராளமான மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்க உள்ளனர். அவர்கள் மாலை 4 மணியளவில் சர்ப்பவாசலில் இருந்து தாம்பூல தட்டுக்களை ஏந்தி ஆதியோகிக்கு ஊர்வலமாக நடந்து செல்ல உள்ளனர்.

பின்னர், ஆதியோகி முன்பு இருக்கும் சப்தரிஷிகளின் திருமேனிகளுக்கு பூ, பழங்களை படைத்து ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய உள்ளனர். மேலும், அங்கு சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு பழங்குடி மக்கள் தங்கள் கரங்களாலேயே தீர்த்தங்களை அர்ப்பணிக்க உள்ளனர். இதை தொடர்ந்து பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான ஈஷா தன்னார்வலர்களும் திரளாக பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக, தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி ஆகிய மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுகணக்கான குழந்தைகளுக்கு ஈஷா சார்பில் புத்தாடைகள் நேற்று இலவசமாக வழங்கப்பட்டது. இதுதவிர, ஈஷா யோக மையத்தில் இருந்து இருட்டுப்பள்ளம் வரை உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று இன்றும், நாளையும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை பரிமாற உள்ளனர்.