சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோவில் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார்.
அன்று மாலை பனகல் பூங்கா முதல் பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவில் (வாகனப் பேரணி) கலந்துகொண்டு தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை பாஜக வேட்பாளர்களை ஆதரித்துவாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் தேர்தல் நடத்தை விதிமீறல் நடந்ததாக பாண்டிபஜார் மற்றும் மாம்பலம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.