• Tue. Dec 10th, 2024

தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை புறக்கணித்த வேட்பாளர்கள்

Byவிஷா

Apr 12, 2024

கோவையில் தொழில்துறையினருடன் சந்திப்பு நிகழ்வுக்கு முக்கியத்துவம் தராமல் கலந்துரையாடல் கூட்டத்துக்கு வேட்பாளர்கள் வராததால் தொழில்துறையினர் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ளது இந்திய தொழில் வர்த்தக சபை. பாரம்பரியமிக்க இந்த தொழில் அமைப்பில் 1,500 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்களுடன் தொழில்முனைவோர் கலந்துரையாடும் நிகழ்வு இன்று நடத்த திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.
காலை 10 மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தொழில் முனைவோர் பலர் அரங்கத்துக்கு வந்து காத்திருந்தனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் நிகழ்வுக்கு வரவில்லை. அதிமுக சார்பில் வேட்பாளருக்கு பதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வந்திருந்தார்.
பாஜக சார்பில் அண்ணாமலை பங்கேற்க வருவதாக கூறிய நிலையில் 11.45 மணி வரை வரவில்லை. இதனால் தொழில்முனைவோர் பலர் கடும் அதிருப்தியடைந்தனர். காலை 10 மணி அளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட கூட்டம் 12 மணி ஆகியும் தொடங்கவில்லை. நீண்ட நேரத்துக்கு பின்பே அண்ணாமலை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
தொழில் நகரான கோவையில் தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வேட்பாளர்கள் ஆர்வம் காட்டாதது, தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.