• Fri. Apr 26th, 2024

ஆன்லைன் தேர்வு கோரி போராடிய கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து

Byமதி

Dec 18, 2021

கொரோனா தொற்றுக்கு காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு கடந்த செமஸ்டர் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்தநிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது.

ஆனால் மாணவர்கள் நடப்பு செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் தமிழக அரசின் உயர்கல்வித்துறை நேரடி முறையில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தது.

ஆப்லைன் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த அட்டவணையை மாற்றி அமைத்து, ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டது. அந்தவகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்த அட்டவணையை ரத்துசெய்து, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதற்கு ஏதுவாக காலஅவகாசம் கொடுத்து, தற்போது புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 2-ந் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது, மதுரையில் 9 வழக்குகள், கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை மற்றும் திருச்சியில் தலா ஒன்று என மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அந்த வழக்குகள் அனைத்தையும் கைவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், அந்த 12 வழக்குகளிலும் தமிழ்நாடு காவல் துறையினரால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *