• Sat. Oct 12th, 2024

உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க சொல்லும் பிரதமர் வெளிநாட்டு நிறுவன தயாரிப்பு காரில் பயணிக்கலாமா?- சிவசேனா கேள்வி

Byகாயத்ரி

Jan 3, 2022

உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டும் என்று மக்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, 12 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன தயாரிப்பு காரில் பயணிக்கலாமா? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நவீன கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய விலை உயர்ந்த ஜெர்மனி தயாரிப்பான மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 ரக கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை 12 கோடி என்றும் 2 கார்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.

இந்தக் காரில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. உலகெங்கும் தயாரிக்கப்படும் கார்களில் இருப்பதிலேயே உயர்ந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட கார் இதுவாகும். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த கார்கள் வாங்கப்பட்டு உள்ளன. மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 ரக கார் ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்களின் தாக்குதலை தாங்கும் சக்தியை கொண்டதாகும். வெடிகுண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், விபத்து ஏற்பட்டால் தானாக பெட்ரோல் டாங்க் மூடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இந்நிலையில், இதனை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து, சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டும் என்று மக்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, 12 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன தயாரிப்பு காரில் பயணிக்கலாமா? என சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சீவ் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னை சாமானியன் என்றும் ஏழை தாயின் மகன் என்றும் கூறி விளம்பரம் தேடும் பிரதமர் மோடி இதுபோன்ற காரில் பயணிக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அம்பாசடர் காரை மட்டுமே பயன்படுத்தியதாகவும், எப்பேர்ப்பட்ட அச்சுறுத்தலின் போதும் அவர் தனது காரை மாற்றவில்லை என்றும் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *