• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் முடக்கமா? – மத்திய அரசு விளக்கம்

அன்னை தெரசாவின் அறக்கட்டளை அமைப்பின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கி விட்டதாக மேற்குவங்க முதல்வர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், மத்திய அரசு அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளது.


மேற்கு வங்கத்தில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கி விட்டதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த அமைப்பின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதால், அதை நம்பியிருக்கும் 22 ஆயிரம் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருந்துகள், உணவுகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டு நிதி பங்கீட்டு சட்ட உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால், அந்த அமைப்பே பாரத ஸ்டேட் வங்கியிடம் சேமிப்பு கணக்கை முடக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டு நிதி பங்கீட்டு சட்ட உரிமத்தை புதுப்பிக்க கோரி மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அளித்த விண்ணப்பங்கள் சில காரணங்களால் டிசம்பர் 25ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. உரிமத்தை புதுப்பிக்க மறுஆய்வு விண்ணப்பம் கிடைக்கப் பெறவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே அன்னை தெரசாவின் அறக்கட்டளை அமைப்பும் தங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான ஒப்புதல் காலாவதி ஆகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் பிரசனைகளை தவிர்ப்பதற்காக அந்த கணக்குகளை இயக்க வேண்டாம் என முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் அமைப்பு தெடர்ந்து செயல்பட எந்த தடையும் மத்திய அரசு விதிக்கவில்லை என்றும் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி கூறியுள்ளது.