குமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில்களில் புத்தரிசி பூஜை அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்பு…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.
வயல்களில் விளையும் நெற்கதிர்கள், முதலில், கோவிலில் வைத்து பூஜிக்கப்படுகின்றன. இது, நிறை புத்தரிசி பூஜை என அழைக்கப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வயல்களில் பயிரிடப்பட்ட குங்கும்பப்பூ நெற்பயிர்கள், தற்போது, அறுவடைக்கு தயாராக உள்ளன. இங்கிருந்து, நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, கன்னியாகுமரி அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடந்தன.

அதன்பின், மேளதாளத்துடன், இந்த நெற்கதிர்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. நெற்கதிர்கள், அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். இதில் கோயில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் கண்ணதாசன் உட்பட அதிகாரிகள் இருந்தனர். இதுபோல் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது.
