நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி பகுதியில் உள்ள ஆண்டவர் நர்சிங் கல்லூரியில், பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்றது.

இந்த முகாமுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பேருந்தில் அதிநவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டு, பெண்களுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. மார்பக புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் வகையில், அல்ட்ராசவுண்ட், மாமோகிராம் உள்ளிட்ட கருவிகள் கொண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று பரிசோதனைகளைச் செய்துகொண்டனர். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது. மருத்துவர்கள் குழு விழிப்புணர்வு உரை நிகழ்த்தி, பெண்கள் தங்களது உடல் நலனில் சிறு மாற்றங்களையும் கவனிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினர். முகாமில் கலந்து கொண்ட பலர், இப்படிப் பட்ட பரிசோதனைகள் கிராமப்புற மக்களுக்கும் அடிக்கடி நடக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

திருமணமான பெண்கள் மட்டுமில்லாமல் திருமணம் ஆகாத பெண்களும் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாயில் ஏற்படும் தொற்றுகளை கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.