• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம்..!

Byவிஷா

Nov 30, 2023

கூடலூர் நகராட்சியில், நகரத்தின் தூய்மைக்காகப் பாடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு பசியாற்றும் வகையில் காலை உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ளது கூடலூர் நகராட்சி. பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த நகராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கூடலூர் நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த அறிவரசு என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் பதவி ஏற்ற பின்னர், இராணுவ வீரர்கள் வீடுகளுக்கு சொத்து வரி விலக்கு, இறப்பு சான்றிதழ் இலவசம் என நகராட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கவனம் ஈர்த்து வருகிறார். கடந்த ஆண்டு 100 சதவீத வரி வசூல் செய்ததற்காக தமிழகத்தில் இரண்டாவது சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பசியின்றி மாணவர்கள் படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியதை உதாரணமாக கொண்டு, நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி உள்ளார், அறிவரசு. விடியற்காலையில் பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்கள் காலை நேரங்களில் உணவு சமைக்கவோ, உண்ணவோ வாய்ப்பு இருப்பதில்லை. அதனால் பசியோடு வெகுநேரம் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர்கள் பசியின்றி பணியாற்றும் வகையில் துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி அதிகாலையில் பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்களுக்கு டீ, பிஸ்கட் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில், ”நான் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றேன். மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது. மாணவர்களின் பசியாற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் போல, துப்புரவு பணியாளர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் துவக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு சுமார் 8000 ரூபாய் வரை செலவு செய்து பணியாளர்களுக்கு காலை உணவு சுவையாகவும், தரமாகவும் கொடுக்கப்படுகிறது. பணம் செலவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் பணியாளர்கள் காலை உணவை முடித்துக் கொண்டு பணி செய்வதால் மன நிறைவுடன் அவர்கள் பணி செய்து வருகின்றனர். மேலும் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நாட்களில் நகராட்சியில் உள்ளவர்கள் தாமாக முன்வந்து காலை உணவு திட்டத்திற்கு நன்கொடை அளித்து வருகின்றனர். அதிகாலையில் பணிக்கு வரும் தொழிலாளர்கள் பசியின்றி பணி செய்வதால் வேலை திறன் அதிகரிக்கிறது. இதேபோல நகராட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இத்திட்டம் குறித்து தூய்மை பெண் பணியாளர்கள் கூறுகையில், “அதிகாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி பணிக்கு வருவதால் பசியுடன் மதியம் வரை வேலை செய்ய வேண்டிய சூழல் நிலவியது. தற்போது நகராட்சியில் காலையில் பணிக்கு வந்தவுடன் பிஸ்கட், டீ தருகிறார்கள். பின்னர் 9 மணி அளவில் காலை உணவு தரப்படுகிறது. நாள்தோறும் இட்லி, பூரி, பொங்கல், வெஜ் பிரியாணி என விதவிதமான உணவுகள் சுவையாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் பசியின்றி பணியை மேற்கொள்ள முடிகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் இத்திட்டத்தில் மிகுந்த பயனடைந்துள்ளதாகவும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு பணியை செய்யும் தங்களுக்கு பசியாற காலை உணவு தரப்படுவதால் சோர்வின்றி பணியை மேற்கொள்ள முடிகிறது” எனத் தெரிவித்தனர். நகரம் தூய்மையாக இருக்க பாடுபடும் தூய்மை பணியாளர்களின் பசியாற்றும் இந்த காலை உணவு திட்டம், ஒரு முன்னோடி திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது துப்புரவு பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.