கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ராசிபாளையம், அருகம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பரவலாக உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நொய்யல் ஆற்றின் கிளை கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், சோமனூர் சாலையில் உள்ள தரைப்பாலத்திற்கு கீழே அமைந்துள்ள துணைக் கால்வாயில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் 30-க்கும் மேற்பட்ட ப்ளீச்சிங் பவுடர் மூட்டைகளை வீசிவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் விவசாயிகள், சோமனூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி தனி அலுவலர், சூலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சூலூர் காவல் நிலைய போலீசார், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கால்வாயில் ப்ளீச்சிங் பவுடர் மூட்டைகளை வீசியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், தாமதமானால் தென்னை மரங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
இரவு நேரத்தில் கால்வாயில் ஊழியர்களை இறக்குவது சிரமம் என்பதால், பகல் வேளையில் மூட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், இரவு நேரத்தில் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.