புதுக்கோட்டைக்கு 04.012026 அன்று வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை வரவேற்க பாஜக சார்பில் ஆயத்த பணிகள் வேக வேகமாக நடைபெற்று வருகின்றன.

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டைக்கு இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களும் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித் ஷா அவர்களும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் வர வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. அதாவது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜகவின் கொள்கைகளை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டங்களின் வாயிலாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன் நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நிகழ்வில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அந்த கூட்டணியின் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக புதுக்கோட்டையில் தனியார் நிலம் ஒன்றை இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு தயார்படுத்தும் பணியும் தொடங்கியது.
இந்த நிலையில் திடீர் அறிவிப்பாக மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரவில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மட்டும்தான் ஜனவரி 4ஆம் தேதி வருகிறார் என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதனால் மைதானம் தயார் படுத்தும் பணி இதற்கு முன்பு மெதுமெதுவாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அந்த மைதானம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து அவற்றை கண்காணிக்கும் பணியில் பாரதிய ஜனதா கட்சியினரும் காவல்துறை அதிகாரிகளும் அடிக்கடி சுற்றிப் பார்த்து வருகின்றனர். மேடை அமைக்கும் பணி தொடங்கி கொடி கட்டுதல் நாற்காலிகள் கொண்டு வந்து போடுதல் கேலரிகள் பிரிப்பது என பல்வேறு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முன்பு அறிவித்தபடி இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது உள்ள திடீர் அறிவிப்பில் பாஜக மட்டும் தான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறது என்று தெரியப்படுத்தும் விதமாக வேறு கட்சி கொடிகள் எதுவும் பறக்காமல் பாரதிய ஜனதா கட்சியில் கொடிகள் மட்டுமே எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பாஜகவின் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான கருப்பு முருகானந்தம் தலைமையில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட பாஜக அனைத்து பிரிவுகளிலும் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் தொடர்ந்து மேற்பார்வை செய்து வருகிறார்கள்.




