

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம், தில்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் இன்று காலை நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார்.இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார்.நான்கு மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த கூட்டம் நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் தேர்தல்களுக்கு, மத்திய பார்வையாளர்கள் மற்றும் இணை பார்வையாளர்களை பாஜக நாடாளுமன்ற வாரியம் நியமித்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரபிரதேசத்திற்கும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரகாண்டிற்கும் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மணிப்பூரின் மத்திய பார்வையாளராகவும், கிரண் ரிஜிஜு இணை பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவா மாநிலத்துக்கு, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன்னதாக பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று நடைபெற்றது.
