• Sun. May 5th, 2024

எடப்பாடியை விமர்சனம் செய்த பாஜக வேட்பாளர் ராதிகாசரத்குமார்

Byவிஷா

Apr 6, 2024

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் ராதிகாசரத்குமார், எடப்பாடி பழனிச்சாமியை டெல்லியில் சுவிட்ச் ஆப், தமிழகத்தில் பீஸ் அவுட் என விமர்சனம் செய்திருப்பது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகாவும், அவரது கணவர் நடிகர் சரத்குமாரும், சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகர்ப்புறங்களிலும், கிராமப் பகுதிகளிலும் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொதுமக்களிடையே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது நடிகை ராதிகா பேசுகையில், நான் உங்கள் சகோதரியாக, சித்தியாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளராக தாமரை சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து மிகப் பெரிய வெற்றியை தேடி தந்தால் தொகுதியில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி எனக்கு வாய்ப்பளித்தால் என் கடமையை முழுமையாக நிறைவேற்றுவேன்.
சிவகாசியில் இருந்து டெல்லிக்கு பாலமாக இருப்பேன். வெளிநாட்டில் கூட மீண்டும் பிரதமராக மோடி வருவார் எனக் கூறப்படும் நிலையில், 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. நானும், என் கணவர் நாட்டாமை சரத்குமாரும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை தீர்வு காண ஆய்வு செய்து வருகிறோம். நீதிமன்றத்தில் நடந்து வரும் பட்டாசு தொழில் வழக்கு என்பது இறுதி கட்டத்தில் உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டருக்கு தடை விதித்து வரியை உயர்த்தியதால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பிஜேபிக்கு என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் இதுவரை அரசியலுக்கு வந்ததில்லை. தற்போது தான் முதல் முதலாக வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிடுகிறேன். பாஜக வெற்றி பெற்றால் நமக்கெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் திமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? என அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்கின்றனர்.

இபிஎஸ் – தேமுதிக கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிப்பார்கள்? நாங்கள் வெற்றி பெற்றால் டெல்லி சென்று போராடுவேன். திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவேன் என்று கூறும் ஈபிஎஸ் க்கு டெல்லியில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இங்கே பீஸ் போய் அவுட்டாகி விட்டார். மாநிலத்தில் எதிர்க்கட்சியாக மட்டுமே அதிமுக உள்ளது. உங்கள் தொகுதியின் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க உங்கள் பிரதிநிதியாக செயல்பட எனக்கு வெற்றி வாய்ப்பை தாருங்கள் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், சித்தியாக, வாணி-ராணியாக உங்கள் முன்பு வேட்பாளராக வாக்கு கேட்டு வந்துள்ள நான் உங்களுக்காக கண்டிப்பாக இங்கே தங்கி உழைப்பேன். என்னை நம்புங்கள். இந்தத் தொகுதியில் தான் விருதுநகரில் எனது வீடு உள்ளது. தேர்தல் தினத்தன்று அனைவரும் ஓட்டு போடுங்கள். வாக்களிக்காமல் இருக்க கூடாது. அது நம்முடைய ஜனநாயக கடமை என்றார்.

யார் பீஸ் போனவர் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *