• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நவீன அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கான பூமி பூஜை..,

BySeenu

Nov 11, 2025

தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் கோவை மாநகர பகுதியில் 11 நவீன அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கான பூமி பூஜை கோவை, புலியகுளம் மாநகராட்சி பள்ளியில் இன்று நடைபெற்றது.

இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

மேலும், இந்நிகழ்வில் தேசிய அனல் மின் நிறுவனத்தின் முன்னாள் சுயாதீன இயக்குநர் சங்கீதா வாரியர் கலந்து கொண்டு சமூக பங்களிப்பு நிதி வழங்கினார்.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,*

‘கடந்த நான்கரை ஆண்டுகளாக கோவை தெற்கு தொகுதியில் மிகவும் மோசமான நிலையில் இருந்த அங்கன்வாடிகளுக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியினை வழங்கி மையத்தை மேம்படுத்தி வருகிறோம். மேலும் பல்வேறு நிறுவனங்களில் சமூகப் பங்களிப்பு நிதி பெற்று புதிதாக 11 நவீன அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கான பூஜை பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் அதிக அளவில் அங்கன்வாடி மையங்கள் புனரமைக்கப்பட்ட தொகுதியாக கோவை தெற்கு தொகுதி உள்ளது. இதற்கு இத்தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க வின் அம்மன் அர்ஜுனன் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது’ என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் பேசும்போது :

தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் அதிக தொகை அங்கன்வாடி புனரமைப்புக்காக ஒதுக்கியதாகவும், பெண்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கட்சிகள் மட்டுமே பல நன்மைகளை செய்து உள்ளதாகவும், பிற கட்சிகள் மன்னராட்சியாக செயல்படுவதாகவும் கூறினார்.

மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி மிகவும் அவசியம் எனக் கூறியவர், புலிகுளம் பகுதியில் பெண் கல்லூரி அமைய பல்வேறு முயற்சிகள் எடுத்து உள்ளதாக கூறினார். மேலும் கடந்த 15 ஆண்டு காலமாக தேசத்தை பாதுகாக்கும் மகத்தான பணியை பிரதமர் மோடி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ :-

தேசிய அணல் மின் நிறுவனத்திடம் இருந்து சமூக பங்களிப்பு நிதி பெற்று 11 புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கோவையில் அரசு திட்டங்கள் அறிவிக்கப்படும் வேகத்தில் அமல்படுத்துவதில்லை எனவும், குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் பார்க்கிங் வசதி, கழிவறை வசதி ஆகியவை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இருதய சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், இந்த மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவதாகவும், மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு தேவையான பணிகளை செய்யாமல் வெறும் பெயர்களை மாற்றினால் போதும் என தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது என விமர்சித்தவர்.

தி.மு.க அரசின் குறைகளை மறைக்கவே தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை எதிர்த்து வருவதாகவும், தமிழகத்தில் இந்த திட்டம் சரியாக அமல்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார.

பூத் லெவல் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி வழங்காமல், இந்தப் பணிகளை மாநில அரசு மேற்கொள்ள வைப்பதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்த நடவடிக்கையை பாராட்டும் விதமாக தமிழ்நாடு வணிகர் அமைப்பு சார்பில் நாளை கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முன்னதாக அவர் முதலிபாளையம் பகுதியில் நடைபெறும் கட்சி கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதையெல்லாம் திசை திருப்பவே சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த செயல் முறையை தி.மு.க அரசு விமர்சிப்பதாக கூறினார்.

கர்நாடகா, கேரளா, தமிழகத்தை இணைக்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரயில் துவங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த ரயில் சேவையால் 3 மாநில வழித் தடங்களில் உள்ள மக்கள் பயன்பெறுவார்கள் என குறிப்பிட்டார்.