அதிமுக மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான் நசரேத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஈரான்_இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் அங்கு தொடர்ச்சியாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தற்போது, அமெரிக்காவும் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் மிகவும் அபாயகரமான சூழலில் உள்ளனர்.

தற்போது ஈரான் நாட்டில் ஆயிரக்கணக்கான குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். போர் காரணமாக அங்கு நிலவும் பதற்றத்தால் இம்மீனவர்கள் மிகவும் துயரத்தில் தவித்து வருகின்றனர்.
குளச்சல் பகுதியைச் சேர்ந்த ததேயுஸ் என்னும் மீனவர் ஈரான் நாட்டில் உள்ள கிஷ் என்னும் பகுதியில் தமிழக மீனவர்கள் 700-க்கும் அதிகமான பேர் தவிப்பதாக தனது குடும்பத்தினருக்கு அலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். அதிலும் கிஸ் பகுதியில் இருந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு செல்லும் விமான வசதியின்றி தவிப்பதாகவும் அவர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் இருந்து, ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்கச் சென்று, தாயகம் திரும்ப முடியாமல் தவிப்போரை விரைந்துமீட்க மத்திய அரசையும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தையும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.