கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பிச்சம்பட்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக சுமார் 800-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியான பிச்சம்பட்டி, மகிளிப்பட்டி, லாலாபேட்டை, பிள்ளபாளையம், மகாதானபுரம், சிந்தலவாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை விவசாயம் செய்துள்ளனர்.
தற்போது இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் லேசான மழை தூரல் இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் கிருஷ்ணராயபுரம் அருகே பிச்சம்பட்டியில் உள்ள ராமசாமி என்பவரின் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 800க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வாழைத்தாருடன் முறிந்து சாய்ந்தன.
ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து சாய்ந்ததால் சுமார் 2 லட்சத்திற்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.