

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.
முன்னதாக, பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்தது. இவ்வாறு, நிரப்படும் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், 13,331 தற்காலிக ஆசிரியர் பணியை வாபஸ் பெற்று, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான தேர்வர்கள் டிபிஐ வளாகத்தில் மொட்டை அடித்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர் நியமனத்துக்கான உரிய வழிமுறைகள் வெளியிடப்படும் வரை, பணி நியமனம் கூடாது என்றும் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
