• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வருமான வரித்துறையிடம் ரூ.100 கோடியை ஒப்படைத்தார், பகுஜன் சமாஜ் தலைவர்

கணக்கில் காட்டாத ரூ.100 கோடியை வருமான வரித்துறையிடம் பகுஜன் சமாஜ் தலைவர் ஜூல்பிகர் அகமது பூட்டோ ஒப்படைத்தார்,
உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஜூல்பிகர் அகமது பூட்டோ. இவர் நாட்டின் முன்னணி இறைச்சி ஏற்றுமதி குழுமமான எச்.எம்.ஏ. குழுமத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், உலக இறைச்சி சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிறுவனம் இறைச்சி மற்றும் 99 பிற பொருட்களை 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பல கோடி டாலர் அன்னியச் செலாவணியை ஒவ்வொரு ஆண்டும் சம்பாதிக்கிறது. இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவல்களின்பேரில், வருமான வரித்துறை அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சொந்தமான இடங்களில் கடந்த 5-ந் தேதி தொடங்கி 88 மணி நேரம் அதிரடி சோதனைகளை நடத்தியது. 5 மாநிலங்களில், 12 நகரங்களில் உள்ள 35 இடங்களில் இந்த சோதனைகள் நடந்துள்ளன. துணை ராணுவத்தின் உதவியுடன் 180 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் கணக்கில் காட்டாத ரூ.100 கோடி ரொக்கம், தங்க, வெள்ளி நகைகள், முதலீட்டு பத்திரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஜூல்பிகர் அகமது பூட்டோ ஒப்படைத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதே நேரத்தில் ஜூல்பிகர் அகமது பூட்டோவுக்கோ, அவரது சகோதரருக்கோ பாகிஸ்தானுடன் தொடர்பு எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.