கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளியில் நடைபெற்ற அவின்யா கண்காட்சியை கே.ஜி.ஐ.எஸ்.எல். நிறுவனர் அசோக் பக்தவத்சலம் துவக்கி வைத்தார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுகுணா ரிப் வி பள்ளியில் நிறுவனர் K.வெங்கடேசலு நாயுடு பிறந்தநாள் நினைவாக மாணாக்கர்களின் அறிவு மற்றும் செயல் திறன்களை வெளிப்படுத்தும் அவின்யா 2024 எனும் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக, கே.ஜி.ஐ.எஸ்.எல்.நிறுவனத்தின் நிறுவனரும்,கே.ஜி. மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் அசோக் பக்தவச்சலம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சுகுணா தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, பள்ளியின் தாளாளர் சுகுணா, இணை நிர்வாக இயக்குனர் அனீஸ் குமார், சாந்தினி அனீஸ் குமார், சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் ராஜாமணி அம்மாள், பள்ளி இயக்குநர் மற்றும் முதல்வருமான ஆண்டனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் மாணவர்களே வடிவமைத்த ஏவுகணை, லேண்டர்,ரோவர், சூரிய ஒளியில் இயங்கும் கார் ஆகியவை இடம் பெற்றன. மோட்டார் பம்பு வடிவமைப்பு, கிராமசபை, நீதிமன்ற நிகழ்வுகள், பண்டைய கால தமிழர்களின் கலை கலாச்சாரம், ஆங்கிலத்தின் சிறப்பு மற்றும் நாடகம், மருத்துவத்துறை, தாவரவியல், வேதியியல், விளையாட்டு, யோகா மற்றும் கணித புதிர்கள் போன்ற 165 விதமான தலைப்புகளில் செயல்முறை விளக்கங்களுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக இந்த கண்காட்சியில்,சந்திராயன் 3 விண்கலம் மெதுவாக நிலவில் இறங்கியதையும், அதனை தொடர்ந்து அதில் இருந்த ரோவர் வாகனம் மெதுவாக வெளியில் வருவதையும் தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.
இதனை வியப்புடன் கண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் விண்கலம் தரையிறங்கியதை நேரில் கண்ட அனுபவம் போல இருந்ததாக தெரிவித்தனர்.