கோவை, வடவள்ளி அடுத்த கஸ்தூரி நாயகன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி நிகாரிகா ( 26) மற்றும் குடும்பத்தோடு வசித்து வருகிறார். கடந்த 7 ஆம் தேதி இரவு வீட்டில் நிகாரிகா குடும்பத்தோடு தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டு உள்ளது.

உடனே நிகாரிகா கதவை திறந்து உள்ளார். அப்போது உக்கடத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், கிருஷ்ணவேணி, ஹரி பிரசாத் மற்றும் மர்ம நபர்கள் ஒரு கும்பலாக நிகாரிகாவை தள்ளி விட்டு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிகாரிக்கா சத்தம் போடத் துவங்கினார். அப்போது அவர்கள் நிகாரிக்காவின் கணவர் விஜய் எங்கே என வீட்டிற்குள் உள்ள அறைகளில் சென்று தேடி உள்ளனர். விஜய் ஏற்கனவே நிகரிகாவின் தங்கை வர்ஷா பெயரில் பைனான்ஸ் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக அவர்கள் கூறி தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து உள்ளனர். பிறகு வீட்டில் இருந்த நிகாரிக்காவின் தங்கை வர்ஷாவை அவர்கள் கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றுவதற்கு சென்று உள்ளனர். உடனே நிகாரிக்கா போலீசுக்கு போன் செய்வதாக சத்தம் போட்டு உள்ளார். உடனே அந்த நபர்கள் நிகாரிகாவை கீழே தள்ளி விட்டு அங்கு இருந்து காரில் தப்பிச் சென்றனர். இது குறித்து நிகாரிகா வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் கிருஷ்ணவேணி , வடவள்ளி லிங்கனூர் கருப்பராயன் கோவில் புதிய பூசாரி பிரவீன் குமார் , சிவன் கோவில் பூசாரி ஹரி பிரசாத் உள்ளிட்ட 3 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லிங்கனூர் கோவில் பூசாரிகள் நள்ளிரவில் ரவுடிகளுடன் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தகராறு செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.