உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை – 2026 சர்வதேசப் போட்டியில் தமிழக வீரர்கள் 6 பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். பதக்கங்களுடன் சென்னை திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் அக்டோபர் 13 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டியில், 49 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட கிக்பாக்ஸிங் வீரர்கள் பங்கேற்றனர்.

இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழக வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திப் பதக்கங்களைக் குவித்தனர்.
ஜூனியர் ஆண்கள் பிரிவில் அகில் ரக்ஷித் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். இளம் சிறுமியர் பிரிவில் ரக்ஷத்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றார். ஆண்கள் பொது பிரிவில் கிஷோர் ஒரு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் தமிழக வீரர்கள் மொத்தம் 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என ஆறு பதக்கங்களை வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு, இந்திய அணியின் மேலாளர் ஓம் பிரகாஷ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்களின் இந்தச் சாதனைக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.



