• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அசோகனுக்கு அல்வா… சிவகாசியை மீண்டும் வசப்படுத்தும் கேடிஆர்..,

ByRadhakrishnan Thangaraj

Jan 16, 2026

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் கந்தக பூமியான சிவகாசியில்… பட்டாசு தொழில், அச்சுத் தொழில் என கொடிகட்டி பறக்கும் சிவகாசியில் அரசியலிலும் அதிகாரம் செலுத்துவதில் தொழில் அதிபர்கள் குறைந்தவர்கள் அல்ல.

அதற்கு உதாரணமாகத்தான் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தொழிலதிபர் அசோகன்

10 ஆண்டுகளாக அமைச்சர் பதவி வகித்த கே டி ராஜேந்திர பாலாஜி கடந்த 2021 ஆம் தேர்தலில் சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் சிவகாசியில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தொழிலதிபர் அசோகன்.

இவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற நாள் தொடங்கி, இதோ அடுத்த தேர்தல் நெருங்கிவிட்ட இப்போது வரை இவர் மக்களிடம் நெருங்கியதே இல்லை. தொகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்று அசோகன் மீது பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு பலமாக எழுந்திருக்கிறது.

குறிப்பாக சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணியை அமைச்சராக இருந்தபோது கே.டி.ராஜேந்திர பாலாஜி அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

இந்த பணிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காலதாமதம் ஆன நிலையில் தற்போது எம்எல்ஏவாக இருக்கக்கூடிய அசோகன் இந்த பாலத்தை விரைவாக திறக்க வேண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு வாரத்திற்கு இருமுறை பாடத்தை பார்வையிடுவது அதிகாரிகளை சந்திப்பது என தீவிரம் காட்டி பாலத்தை தான்தான் திறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காத்திருந்தபோது வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எம்பி மாணிக் தாகூர் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

அதிலும் ஒரு ஓரமாக நின்று பாலத்தை திறந்து வைத்து புகைப்படங்களை எடுத்தும் சமூக வலைதளங்களில் பாலத்தை தன் முயற்சியால் கொண்டு வந்ததாக மார் தட்டி கொண்டார் சட்டமன்ற உறுப்பினர் அசோகன்.

இதே வேளையில் அதிமுகவின் ஐடி விங் தொழில்நுட்ப பிரிவினர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட போட்டோ வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமூக வலைதள போர் நடத்தினர் .

இப்படி எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக, தான் இருப்பதை அவ்வப்போது அசோகன் உறுதிப்படுத்திக் கொண்டாலும் மக்கள் மத்தியில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வி எழும் அளவிற்கு தான் இவருடைய செயல்பாடுகள் இருக்கின்றன.

சிவகாசி மக்களிடம் பேசும் பொழுது, “ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எப்போதாவது எம்எல்ஏ வருவார், செல்வார் அவரை சந்திப்பதற்கு நாங்கள் சென்றால் கூட பார்க்க முடியாது. மக்கள் பிரச்சினைகளை காது கொடுத்து அவர் கேட்டதில்லை. அவர் சார்ந்த தொழில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்” என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் .

தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தான் செய்த சாதனைகளை சட்டமன்ற உறுப்பினர் அசோகன் காலண்டராக அடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். விளம்பரம் செய்து மக்கள் மத்தியில் இடம் பிடித்து விடலாம் என்று நினைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தான் சார்ந்து சமுதாய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை அதே போல் காமராஜர் பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வெளியூர் சென்று விடுவதாகவும் அவர் சார்ந்த நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களே அதிருப்தியில் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் தொகுதி மாறி தோல்வியை தழுவிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தற்போதும் ஒரு அமைச்சர் போலவே தொகுதியில் வலம் வருகிறார். எந்த சமுதாய மக்களாக இருந்தாலும் சரி அவரை அணுகுவது எளிமையாக உள்ளது. அவரை சந்தித்து தங்கள் பகுதியில் கோவில் கட்டுவது ,கல்வி நிதி உதவி, மருத்துவ உதவி என சென்றாலும் மனம் சுளிக்காமல் இயன்ற உதவிகளை செய்து மக்கள் மத்தியில் இடம் பிடித்து வருகிறார்.

இன்றும் அவர் செல்லும் இடங்கள் எல்லாம் ஒரு அமைச்சர் செல்வது போல் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் படை சூடச் செல்கிறார் வரும் தேர்தலில் கேடிஆருக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சிவகாசி மக்கள் டீ கடைகளில் பேச ஆரம்பித்துவிட்டனர்.

”எம்.எல்.ஏ. ஆனபோதும் கூட மக்களை விட தன் தொழிலையே அதிகம் கவனித்த அசோகன், முழு நேரமாக தொழிலையே கவனிக்கட்டும். கேடி.ஆர். மீண்டும் மக்கள் பிரதிநிதி ஆகட்டும்” என்பதே சிவகாசியின் இன்றைய சிச்சுவேஷன்.