பேராவூரணி அருகே கண் பார்வை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நேரில் சென்று குடும்ப சூழ்நிலையை கேட்டறிந்து, அவர்களுக்கு நிதி உதவி வழங்கியதோடு, அரசு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் – விஜயா தம்பதியினர். கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு ரமேஷ் (32), ராஜேஸ்வரி (29), எழிலரசி (26) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ரமேஷ், எழிலரசி இருவரும் கண் பார்வை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர்கள் அப்பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வியாழக்கிழமை தொந்துபுளிக்காடு சென்று சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தற்போதைய உடனடித் தேவைகளுக்காக ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.

உடனடியாக பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனை தொடர்பு கொண்டு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கவும் கேட்டுக் கொண்டார். மேலும், அந்த வீட்டை கட்டித் தரவும், கழிப்பறை, குளியலறை வசதிகள் ஏற்படுத்தி தருவதாகவும் சக்திவேல் குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார்.