• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருவர் அதிரடி கைது..!

Byவிஷா

Mar 24, 2023

பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா நிதிநிறுவனத்தைச் சேர்ந்த இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 2ஆயிரத்து 438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதில் இயக்குனராக இருந்த ஹரிஷ் எந்தவித வருமானமும் இல்லாமல் அவருடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில் பாஜகவில் இணைந்த அவருக்கு விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பாஜக நிர்வாகி ஹரிஷ் சொத்து மற்றும் வங்கி கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி இருந்தனர்.
இந்த வழக்கில் தற்போது பாஜகவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.அந்த நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குனரான மாலதி என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல்ராஜ் என்ற மூன்று பேரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவில் ஹரிஷ் மீது மோசடி வழக்கு இருக்கும் நிலையில் பாஜகவில் சில மாதங்களுக்கு முன்பு ஹரிஷ் விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.