கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கம்பளியாம்பட்டியில் கோலகம்பளி மந்தை நாயக்கர் மந்தையில் அரங்கநாதப்பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மாலை தாண்டும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான மாலை தாண்டும் திருவிழா நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். திருவிழாவை முன்னிட்டு கோலகம்பளி மந்தை நாயக்கர் சார்பில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை ஒட்டி கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி இப்பகுதி பக்தர்கள் 8 நாள் விரதம் இருந்து கோலகம்பளி மந்தை நாயக்கர் மந்தையில் உள்ள அரங்கநாதப்பெருமாள் சாமிக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார மாவட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த 14 மந்தையர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் சலை எருது மாடுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க கோவில் எதிரே சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர் இதில் கரூர்,திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 14 மந்தை மாடுகள் கலந்து கொண்டனர்.

அங்கிருந்து கோலகம்பளி மந்தை நாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்ட எல்லை கோட்டை நோக்கி சுமார் 500க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது.
இதில் கரூர் மாவட்டம் ஆர்டிமலை வாளியம்பட்டி கோனதாதா நாயக்கர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து எல்லை கோட்டை அடைந்து வெற்றி பெற்றது இதேபோல் 2வதாக திருச்சி செக்கணம் கோலகம்பளி நாயக்கர் மந்தை மாடும், 3 வது மாடாக பில்லூர் பிட்டமநாயக்கர் மந்தை மாடும் எல்லை கோட்டை அடைந்து வெள்ளை மாத்தை தாண்டு வெற்றி பெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை தூவி வரவேற்று எழும்பிச்சை பழங்களை பரிசாக வழங்கப்பட்டது.
இதில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.