சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற சைமா முன்னாள் தலைவர் கே.வி.சீனிவாசனுக்கு சைமா சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ITMF ) என்பது 1904-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பழமையான அரசு சாரா வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகும். ITMF பருத்தி / பஞ்சு உற்பத்தியாளர்களில் இருந்து நூல் நூற்பவர்கள், துணி உற்பத்தியாளர்கள், துணி பதனிடுபவர்கள் மற்றும் சாயமிடுபவர்கள், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியாளர்கள் போன்றவர்களையும் ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி சார்ந்த இரசாயன உற்பத்தியாளர்கள் என ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியின் 90 சதவீத உற்பத்தியை உள்ளடக்கிய கூட்டமைப்பாகும்.
சுருக்கமாக, ITMF பலவகையான பஞ்சு மற்றும் பலவகையான ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் துறையின் உலகளாவிய அமைப்பாக விளங்குகிறது. இன்று ITMF கிட்டத்தட்ட 40 சங்கங்கள் மற்றும் 100 நிறுவனங்களை அனைத்து பிரிவுகளிலிருந்தும் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் இருந்தும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ITMF உறுப்பினர்கள் அனைத்து முக்கிய பஞ்சு. ஜவுளி மற்றும் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, இந்திய பருத்தி சங்கம் மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் ஆகியோருடன் சேர்ந்து 14 இந்திய நிறுவனங்களும் ITMF - ன் உறுப்பினர்களாக உள்ளனர்.
கோவையில் உள்ள பிரீமியர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், டாக்டர் கே.வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் மேற்படி சங்கத்தின் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நான்காவது தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்பு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், கோவை, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம், கோவை மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம், மும்பை ஆகியவைகளின் தலைவராக செயல்பட்டுள்ளார்.