• Sat. Apr 27th, 2024

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்.., புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

Byவிஷா

Jul 3, 2022

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை கடந்த வாரம் அனுப்பிய சுற்றறிக்கையில், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இந்த பணிநியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஆசிரியர்களை நியமனம் செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஐகோர்ட் மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார். அதில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கல்வித்தகுதி அடிப்படையில் சரியான முறையில் இந்த பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு காலியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் போது இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலியாக இருக்கக்கூடிய விவரங்கள் அனைத்தும் அறிவிப்பு பலகையில் இன்று வெளியிடப்பட வேண்டும் என்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வருகிற ஜூலை 4-ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை எல்லாம் ஆய்வு செய்து 6-ஆம் தேதி இரவு 8 மணிக்குள் அனைத்து விண்ணப்பங்களின் விவரங்களையும் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சுற்றறிக்கையில், தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பணி திருப்தி அளிக்கவில்லை என்றால் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான தகுதிகள் என்னென்ன?

இடைநிலை ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஐ தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஐஐ தேர்ச்சி பெற வேண்டும்.
முதுகலை ஆசிரியர் பதவிக்கு அரசாணை (நிலை) எண்:14ன்படி வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் இருக்க வேண்டும்.
ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் முன்னுரிமைப்படி பரிசீலிக்கப்பட வேண்டும்.
இடைநிலை ஃ பட்டதாரி பணியிடங்களுக்கான முன்னுரிமை: வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

முதுகலை ஆசிரியர்கள் முன்னுரிமை: முதுகலை ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இதைத் தவிர, பள்ளி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் அருகில் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *