தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்ததால் தென்மாவட்ட ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த பராமரிப்பு பணிகள் முடிந்ததால் இந்த ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கோட்டையில் இருந்து வருகிற 27, 28, 30, 31-ம் தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வ.எண்.16848), குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) வருகிற 27, 30-ம் தேதிகளிலும், கன்னியாகுமரியில் இருந்து 28-ம் தேதி கொல்கத்தா புறப்பட வேண்டிய ஹவுரா எக்ஸ்பிரஸ் (வ.எண்.12666), நாகர்கோவிலில் இருந்து 31-ம் தேதி மும்பை புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் (வ.எண்.16340), நாகர்கோவிலில் இருந்து 28-ம் தேதி கச்சிகுடா புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் (வ.எண்.16354), பனாரசிலிருந்து 29-ம் தேதி புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16368), நாகர்கோவில் மற்றும் கோவையில் இருந்து 28, 31-ம் தேதிகளில் புறப்பட வேண்டிய பகல் நேர ரயில் (வ.எண்.16321/வ.எண்.16322) ஆகிய ரயில்கள் வழக்கமான பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22671/வ.எண்.22672) 28, 31-ம் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் திருச்சி வரை இயக்கப்படுவதற்கு பதிலாக மதுரை வரை இயக்கப்படும். 27, 30-ம் தேதிகளில் ஈரோட்டில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டை வரை இயக்கப்படும் ரயில் (வ.எண்.16845), மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து 28, 31-ம் தேதிகளில் இயக்கப்படும் ரயில் (வ.எண்.16846) ஆகிய ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.