தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான் தொலைக்காட்சி தொடர்களுக்கு பின்னணி இசையமைத்துவந்த இமான் காதலே சுவாசம் படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அதன்பின் மஜீத் இயக்கத்தில் விஜய் நடித்த தமிழன் படத்திற்கு இசையமைத்தார் அதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
ரஜினிகாந்த்,விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்கள் பலரது படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இவரது இசை பயணம் விரிவடைந்தது அஜீத்குமார், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.
இமான் கடந்த 2008ல் மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார் இமான்.
அவர் கூறுகையில், ‛‛வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நானும், எனது மனைவியும் புரிந்து கொண்டோம். நாங்கள் இருவரும் கடந்த 2020, நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன், மனைவி அல்ல. எங்களின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் வகையில் ஒத்துழைப்பு தரவேண்டும் என அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறோம்” என இமான் கூறியுள்ளார்.