• Fri. Apr 26th, 2024

தமிழ்நாடு அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில், டாக்டர் அம்பேத்கர் விருது மற்றும் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோர் பற்றி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சந்துருவிற்கு டாக்டர் அம்பேத்கர் விருதும், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவிற்கு சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான பரிசுத்தொகை ரூ.1 லட்சம் என்றிருந்த நிலையில், அது தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விருது பெற்றோருக்கு தங்கப்பதக்கம், விருதுக்கான பரிசுத்தொகை, தகுதியுரை ஆகியவற்றை ஜன.15ம் தேதியான திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இவற்றில் ‘டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது’, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தரப்படுவதாகும். நீதியரசர் சந்துரு, தனது பணிக்காலத்தில் அளித்த பல்வேறு தீர்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காப்பதாக அமைந்திருந்ததாகவும், தமிழகம் முழுவதும் பயணம் செய்து விளிம்பு நிலை மக்களுடன் வாழ்ந்து தமிழ்ச் சமூகம் மற்றும் பண்பாட்டின் பன்முகத்தன்மையை புரிந்துக்கொண்டு செயலாற்றினார் என அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. நீதியரசர் சந்துருவின் வழக்கறிஞர் கால வாழ்வியலையொட்டி புனையப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான், சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பல தரப்பட்ட விமர்சனங்களையும் பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படமென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *