• Tue. Dec 10th, 2024

குப்பைகளை கொட்ட இடம் இல்லாததால் ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் திணறல்!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் தினந்தோறும் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம் திணறல் .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரம் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .இங்கு வீடுகள் மற்றும் கடைகள், அலுவலகங்களில் தினந்தோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிகிறது. இந்த குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு பேரூராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் இல்லாததால், ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த பல வருடங்களாக கொட்டி வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட அளவு மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது .இந்நிலையில் தற்போது தினந்தோறும் சேகரமாகும் குப்பை கழிவுகளை மீண்டும் மீண்டும் அதே இடத்தில் கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு நோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாய்கள் குப்பைகளை கிளறுவதாலும் மற்றும் வாகனங்கள் செல்லுவதால் சேகரமாகும் குப்பை தார் சாலை வரை நீண்டு வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். அதே சமயம் மழை நேரங்களில் மிகவும் சுகாதார கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இதற்கு சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். மேலும் ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டிபட்டி பேரூராட்சி குப்பை கொட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.