சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 137 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. நாகூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை, மேள தாளங்களுடன், தீ சாகசம், மயிலாட்டம், சிலம்பம், புலியாட்டத்துடன் 8 அடி உயரம் உள்ள அம்பேத்கர் சிலையுடன் பிரமாண்டமாக ஊர்வலம் தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி பால் பண்ணைச்சேரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காடம்பாடி, வெளிப்பாளையம் வழியாக 10 கிலோமீட்டர் தூரம் சென்று நாகை புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
அங்கு அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பேரணியை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.