பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்காக ரூ.200 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அறுவடை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஏழை மக்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக வேட்டி சேலை வழங்கி வருகிறது. இந்த திட்டம் ஏற்கனவே 1983ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது ஏழை மக்களும் புத்தாடை உடுத்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி சேலை விநியோகம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, பொங்கல் வேட்டி, சேலை திட்டம் – உற்பத்தி அனுமதி மற்றும் முன்பணமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 2024 பொங்கலுக்கு வழங்கவுள்ள வேட்டி, சேலை திட்டத்திற்கு உத்தேச உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்படுவதாகவும், வேட்டி, சேலலையை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைத்து, கண்காணிக்க வேண்டும் என்றும், ரேசன் கடைகளில் வேட்டி, சேலைகளை வழங்கும் போது விரல் ரேகை பதிவு கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.