• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

Byவிஷா

May 10, 2024

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்களுடன் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்களும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை ஒரே நேரத்தில் 300 ஊழியர்கள் திடீர் விடுப்பு எடுத்துச் சென்றனர். இதனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கடந்த இரண்டு நாட்களாக ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து விடுப்பு எடுத்த பணியாளர்கள் குறித்து விசாரணை நடத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 25 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
மேலும், ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவரும் நேற்று (மே.9) மாலை 4 மணிக்குள் மீண்டும் பணியில் சேர வேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் கெடு விதித்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தொழிலாளர் ஆணையம் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சங்கம், தொழிலாளர்கள் ஆணைய அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தரப்பில் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்தப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகத்துக்கும், ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களின் கோரிக்கைகளான பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு எட்டப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், 25 ஊழியர்களின் பணி நீக்க உத்தரவையும் திரும்பப் பெற்று மீண்டும் பணியில் சேரவும், உடல் நலப் பிரச்சினை காரணமாக விடுப்பு எடுத்த நிலையில், அதற்கான ஆவணங்களை நிர்வாகத்திடம் சம்ர்பிக்கவும் கோடி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சுமுகமான பேச்சுவார்தையை அடுத்து ஊழியர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக விமான போக்குவரத்து துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஊழியர்களின் போராட்டம் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டு பயணிகள் அவதியடைந்து வந்த நிலையில், இரண்டரை நாட்களுக்குப் பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.